கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை,.மகன் உயிரிழந்த வழக்கில், தமிழக காவல்துறை தலைவரும், தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளரும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தூத்துக்குடி அருகேயுள்ள சாத்தான்குளத்தில், திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கைபேசி விற்பனையகம் நடத்தி வந்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடு சமயத்தில், தங்கள் கடையை இரவு 8 மணிக்கு மேல் திறந்து வைத்ததாக காவல்துறை குற்றம் சாட்டி தந்தை ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்து உள்ளார். இதனால் கோபமடைந்த காவல்நிலைய எஸ்ஐக்கள் அவரது கண் முன்னாலேயே, அவரது தந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனை தடுக்க கேள்வி கேட்ட பெனிக்ஸையும் பலமாக அடித்து, இருவரையும் இரவோடு இரவாக கோவில்பட்டி சிறை சாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சம்பந்தமேயில்லாமல் கோவில்பட்டி சிறைச்சாலைக்கு ஏன் அனுப்பினார்கள் என்ற கேள்விக்கு பதில் தெரியாத நிலையில் நேற்று முன் தினம் இரவு மகன் பென்னிக்ஸ் சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதை தொடர்ந்து நேற்று காலை தந்தை ஜெயராஜும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க: போலீஸ் கெடுபிடியால் தந்தை, மகன் பரிதாப மரணம்.. தலைவர்கள் கண்டனம்
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சாத்தான் குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் அவசர அவசரமாக ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (ஜூன்.24) கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று பெரும்பாலான கடைகள் இயங்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த சம்வம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இன்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மதியம் 12.30 மணியளவில் தமிழக காவல் துறை தலைவரும், தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளரும் காணொலி காட்சி மூலம் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.