வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் விவசாயிகளின் போராட்ட பின்னணயில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்து கொண்டு தூண்டி விடுவதாக இந்திய நுகர்வோர் துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை வெடித்து உள்ளது.
நாட்டின் முதுகெலும்பு எனக் கூறப்படும் விவசாயத்தையும் கார்ப்பரேட் வசம் தாரைவார்க்கும் வகையில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா மாவட்டத்தில் பேசிய மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே, “தற்போது நடந்து வரும் போராட்டம் விவசாயிகளுடையதே இல்லை. சீனாவும், பாகிஸ்தானும் அதன் பின்ணயில் உள்ளன.
முதலில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை அவை தூண்டிவிட்டன. தேசிய குடியுரிமை பதிவேடு வருகிறது, குடிமக்கள் திருத்த சட்டம் வருகிறது. அதனால் முஸ்லிம்கள் நாட்டை விட்டு ஆறு மாதங்களில் வெளியேற வேண்டும் என பீதியை கிளப்பின. ஆனால், அப்படியேதேனும் நடந்ததா..
இதுபோன்ற முயற்சிகள் எல்லாம் பலன் கொடுக்காது. இந்த போராட்டங்களால் விவசாயிகளுக்கே இழப்பு நேரிடும். இது மற்ற நாடுகளின் சதி” என்று அமைச்சர் தன்வே பேசி உள்ளார். மத்திய அமைச்சரே விவசாயகள் போராட்டத்தை பாகிஸ்தான்- சீனாவுடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மத்திய அமைச்சரின் பேச்சுக்கு, விவசாயிகளும், ஆதரவாளர்களும், ‘உணர்வுப்பூர்வமிக்க விவசாயிகள் போராட்டத்தை இப்படியா கொச்சைப்படுத்துவார் ஒரு மத்திய அமைச்சர்’ என்று கடுமையாக சாடியுள்ளனர்.
டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியின் தலைவர் எஸ்.மன்ஜிந்தர் சிங் சிர்ஸா, “தலைநகரில் அமைதியாக விவசாயிகள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அவர்கள் போராடுகிறார்கள். இந்த நாட்டுக்காக போராடி உயிர் விட்டவர்கள் நமது விவசாயிகள்.
இந்த நாட்டுக்காக தங்களின் உயிர்த்தியாகம் செய்த பிள்ளைகளை பெற்ற நமது விவசாயிகள் அங்கு போராடுகிறார்கள். அவர்களை தேச விரோதமானவர்களாக சித்தரிக்காதீர்கள்” என்று கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அம்பானி, அதானி தயாரிப்புகளை புறக்கணித்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாயிகள்