காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் சில நாட்கள் முன்பு வரை வெள்ளம் பெருக்கெடுத்தது. தற்போது வெள்ளம் குறைந்தது வருகிறது . இதனால் மணல் கொள்ளை மீண்டும் அதிகரித்துள்ளது. தண்ணீர் குறைந்துள்ளதால் காவிரி கரையில் உள்ள மாம்பழச்சாலைப் பகுதியில் 5க்கும் மேற்பட்டோர் டூ வீலர்களில் மணல் எடுப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.

ஸ்ரீரங்கம் எஸ்ஐ அழகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டவுடன் மூட்டையில் மணல் எடுத்துக்ெகாண்டிருந்த 5 பேரும் தங்கள் டூ வீலர்களை எடுத்து கொண்டு ஓடிவிட்டனர். போலீசார் அங்கு சென்ற பார்த்தபோது குவியல் குவியலாக மணல் இருந்தது தெரிந்தது, அதன் அருகில் 25க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் இருந்தன.

இதை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பனையக்குறிச்சி, சர்க்கார்பாளையம், வேங்கூர், கம்பரசம்பேட்டை, ஜீயபுரம் பகுதிகளில் காவிரியிலும், முசிறி, நொச்சியம், லால்குடி, துடையூர், குணசீலம் பகுதிகளில் கொள்ளிடத்திலும் மூட்டை மூட்டையாக மணல் அள்ளப்பட்டு ஆட்டோ, வேன்களில் கடத்திச் செல்லப்படுகிறது. கொள்ளிடம் இரும்பு பாலம், முக்கொம்பு அணை போன்றவை உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று கூறப்படும் நிலையில், மீண்டும் மணல் கொள்ளை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.