டெல்லி அருகே விவசாயிகள் போராட்டம் நடைபெறும் ஹரியானாவின் குந்திலி எல்லையில், இளைஞர் ஒருவரின் கை, கால் வெட்டப்பட்ட உடல் பேரிகேட் தடுப்பின் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அங்கேயே குடில் அமைத்து தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி அருகே விவசாயிகள் போராட்டம் நடைபெறும் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குந்திலி எனும் பகுதியில் உள்ள போராட்ட மேடை அருகே காவல்துறையினரால் போடப்பட்டிருந்த பேரிகேட் தடுப்பின் மீது ஆண் ஒருவரின் சடலம் இன்று (15.10.2021) அதிகாலை 5 மணிக்கு கண்டறியப்பட்டது.
இந்த சடலத்தின் கை மணிக்கட்டு, கால் வெட்டப்பட்டு, சித்ரவதை செய்து உடல் சிதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஏதோ கூர்மையான ஆயுதத்தால் இளைஞனின் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்பட்டுள்ளன.
இளைஞனின் சடலம் தொங்குவதை கண்டு அதிர்ந்த விவசாயிகள், குந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி சோனிபட் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கொல்லப்பட்ட நபர் பஞ்சாப் மாநிலம் டாம் டரன் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான லக்பிர் சிங் (35 வயது) எனவும், தலித் வகுப்பைச் சேர்ந்த இவருக்கு மனைவி, தங்கை, 8, 10 மற்றும் 12 ஆகிய வயதுகளில் மூன்று மகள்கள் இருப்பதும் தெரியவந்தது.
இவர் கடந்த சில நாட்களாக சீக்கிய போர்க் குழுவான நிஹாங் எனும் அமைப்பினருடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. சீக்கிய மத குருவான குரு கிராந்த் சாஹிப் குறித்து, லக்பிர் சிங் ஆட்சேபிக்கத்தக்க கருத்தை கூறியதால் ஆத்திரத்தில் நிஹாங் குழுவினர் லக்பிர் சிங்கை அடித்து துன்புறுத்தி, கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டக் களத்தின் அருகே அரங்கேறிய இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.