திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குத் தொடர்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் சாலையோர வியாபாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
ஆய்வு செய்ய சென்ற நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகள் முறையாக விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம், கையுறைகள் அணியவில்லை எனக் கண்டித்து, விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை சாலையில் தூக்கி எறிந்து,
பொருட்களை காலால் எட்டி உதைத்து, பழக்கடைகளை சேதப்படுத்தியதோடு அங்கிருந்த வியாபாரிகளை தரக்குறைவாக நடத்தினார். நகராட்சி ஆணையரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் வாசிக்க: ஆலயங்களில் நடக்கும் வேள்விகள் தொற்றுக்கு மருந்தாகக் கூடும்; தமிழக பாஜக தலைவர் கோரிக்கை
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் அந்த அதிகாரி மீது வழக்குத் தொடர்ந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இன்னும் 14 நாட்களுக்குள் பழக்கடைகளை சேதப்படுத்தியது தொடர்பாக நகராட்சி ஆணையர் சுசில் தாமஸ் மாநில மனித உரிமை ஆணையத்திடம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறலுக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், வியாபாரிகளிடம் தான் செய்த தவறை உணர்ந்து, வருத்தம் தெரிவித்து, கிழே தள்ளிவிட்ட பழங்களுக்கான இழப்பீட்டை வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சுசில் தாமஸ் வழங்கியுள்ளார்.