விதிமீறல் கட்டிடங்களுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
சென்னை மண்ணடியில் சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிராக மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கட்டிட உரிமையாளர் மெஹ்ராஜ் பேகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகளும், விதிமீறல் கட்டிடங்களும் புற்றுநோய் போல் பரவி வருவதாக தெரிவித்தனர்.
 
அதிகாரிகள் முறையாக கண்காணிக்காவிட்டால், இதுபோன்ற விதி மீறல்களை தடுக்க முடியாது என்றும், விதிகளை மீறுபவர்களை நீதிமன்றம் பாதுகாக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
 
மேலும் விதிமீறல் கட்டிடங்களுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என மாநகராட்சி
 
அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாநகராட்சி அதிகாரிகளின் உதவி இல்லாமல் இதுபோன்ற விதிமீறல்களில் யாரும் ஈடுபட முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், நேர்மை, அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றாத அதிகாரிகளுக்கு எதிராக பணிநீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
 
மேலும், பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரையில், மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்களை அவ்வப்போது பெற்று அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.