கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி மீது புகார் கூறி சர்ச்சையை பாடகி சின்மயி ஏற்படுத்தினார். இதையடுத்து, தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கிவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் டப்பிங் யூனியன் பொருளாளர் ராஜ்கிருஷ்ணா தலைமையிலான நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “பாடகி சின்மயி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர். பாடகி சின்மயியை நாங்கள் சங்கத்தில் இருந்து நீக்கவில்லை. இரண்டு வருடங்களாக சின்மயி சந்தா பணம் கட்டாததால் தான் அவரது உறுப்பினர் அட்டை தானாக காலாவதியானது. இது சங்கத் தேர்தலை நடத்திய வழக்கறிஞர் வாசுகி எடுத்த முடிவு. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் நடிகர் ராதாரவி மீது பழிசுமத்தி வருகிறார். அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்து, உறுப்பினர் கட்டணத்தை செலுத்தினால் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்.

எந்தவொரு திரைப்படத்துக்கு டப்பிங் பேசுவதாக இருந்தாலும், அது யூனியன் மூலமாக தான் நடைபெற வேண்டும். அதற்கென தனிப்பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். சம்மந்தப்பட்ட டப்பிங் ஆர்டிஸ்டுகளுக்கு வாய்ப்பு வாங்கி தருவது முதல் பணம் பெற்று தருவது வரை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அப்படி அவர்கள் பணம் பெற்று தரும்போது, சங்கத்துக்கு 5 சதவீதமும், அவர்களுக்கு 5 சதவீதமும் என 10 சதவீதப் பணம் பிடித்தம் செய்து கொள்ளப்படும். இது தான் விதிமுறை. ஆனால் இந்த விதிமுறைகளை சின்மயி பின்பற்றுவதில்லை. தானாகவே சென்று டப்பிங் பேசுகிறார். மாயவன், 96 ஆகிய படங்களுக்கு தன்னிச்சையாக டப்பிங் பேசியிருக்கிறார். இதற்காக ஒவ்வொரு படத்துக்கும் 3 லட்சம் வீதம் பணம் பெற்றுள்ளார்.

நடிகர்கள் விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, நாசர் உள்பட பிரபல நடிகர்கள் கூட தாங்கள் நடித்த படங்கள் தவிர்த்து வெளிப்படங்களுக்கு டப்பிங் பேசும் போது, சங்கத்தின் மூலம் தான் செய்கிறார்கள். இவர் மட்டும் ஏன் இந்த விதிமுறையை மீறுகிறார். அவர் தானாக வந்து மன்னிப்பு கடிதம் கொடுத்தால், சங்கத்தில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்” என கூறியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சின்மயி, தன்னை பழிவாங்க ராதாரவி இப்படி செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்க்க 1.5 லட்சம் ருபாய் அபராதம் கட்ட வேண்டும் என டப்பிங் யூனியன் கூறியதை பாடகி சின்மயி கோபமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி ஒரு பேட்டியில் சின்மயியை கடுமையாக விமர்சித்துள்ளார். “ஒரு விளம்பரத்திற்காக இப்படியா கீழ்த்தரமாக நடந்து கொள்வது. அது எப்பொழுதோ நடந்த சம்பவம். இப்போ இதெல்லாம் தேவையா. உனக்கு அப்போ நீ வாயை மூடிக்கொண்டிருந்தாய். என்ன கேவலம் இது. உன் குடும்பத்தை தான் இது புண்படுத்துகிறது.

இலை மறைவா, காய் மறைவா இருந்தால் தான் அது வாழ்க்கை. நீ இப்போ என்ன நிரூபிக்கிற.. எவனோ உன் பின்னாடி வந்தான், கையை பிடிச்சு இழுத்தான்.. இதெல்லாம் சொன்னா உனக்கென்ன மரியாதை கிடைக்கும் நாளைக்கு. பெரிய ஆளை சர்ச்சையில் சிக்க வைப்பதால் நீ பெரிய ஆள் ஆகிவிடமுடியாது” என சவுகார் ஜானகி கோபமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.