ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மனுதாரர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு விதிகளை மீறி சென்னையில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
நீதிமன்றத்துக்கு வரும் வழியில் டிஜிட்டல் பேனர்களை பார்த்ததாகத் தெரிவித்த நீதிபதிகள், டிஜிட்டல் பேனர்களுக்கு உரிமம் மற்றும் அனுமதி வழங்கியது யார் என்ற விவரம் இடம்பெறவில்லை என்று கூறினர்.
 
தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு மீறப்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், தொடர்புடைய அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
 
உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என மாநகராட்சியும், காவல்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்த நிலையில் ..
 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் பேனர் குறித்த புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.