முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடு தொகை 1 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது கேரள அரசு.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில், நம்பி நாராயணன் திறமையான விஞ்ஞானியாக பணியாற்றினார். ஆனால், 1994ம் ஆண்டு நம்பி நாராயணன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தது கேரள காவல்துறை.
விஞ்ஞானி நம்பி நாராயணன் இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாகவும், வேவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்தது கேரள அரசு. இந்த குற்றச்சாட்டிற்காக நம்பி நாராயணன், இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கேரள போலீசாரிடம் இருந்த விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில், நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை, பொய்யான குற்றச்சாட்டுகள் என்று தெரியவந்தது. ஆனால் நம்பி நாராயணனை இஸ்ரோ பணி நீக்கம் செய்திருந்தது.
இதனையடுத்து தன் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளால் தனக்கு ஏற்பட்ட மன, உடல் ரீதியான உளைச்சலுக்கு கேரள அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி, நம்பி நாராயணனுக்கு, ரூ.50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை கேரள அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது.
அதற்கடுத்து மனித உரிமை ஆணையம் உத்தரவின்படி ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரிக்க, கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவை அமைத்தது கேரள அரசு. அந்த குழு விசாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கியுள்ளது கேரள அரசு.
மேலும் வாசிக்க: நளினியும், முருகனும் அமெரிக்க தேர்தல் குறித்தா பேச போகிறார்கள்… நீதிபதிகள் அதிருப்தி