டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா.. வேண்டாமா.. என்பதை காவல்துறை தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 55 நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. வேளாண்சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்து, 4 பேர் குழுவை அமைத்தது.

உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம்பெற்ற பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான், தாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக அறிவித்து குழுவில் இருந்து விலகினார்.

இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லியில் 1 லட்சம் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில், உச்சநீதிமன்த்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 18) விசாரணைக்கு வந்தபோது, விவசாயிகளின் டிராக்டர் பேரணி சட்டவிரோதம் என்றும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், விவசாயிகள் பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது. டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் அதிகாரம் டெல்லி காவல்துறைக்கு உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி பேரணி தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு NIA சம்மன்- பழிவாங்குகிறதா மோடி அரசு