கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி (SBI) அடுத்தடுத்து மூன்று அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் மக்களிடம் பண புழக்கம் அதிகரிக்கவேண்டும். இதுவே பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி என பல பொருளாதார வல்லுனர்களும் கருது தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி அடுத்தடுத்து மூன்று அசத்தலான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலாவதாக அவசர கடன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது எஸ்பிஐ. நாட்டிலேயே எந்த ஒரு தனிநபர் கடன் திட்டத்தைவிட மிக குறைந்த வட்டியாக 10.5 சதவீத வட்டிதான் வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது. yona sbi ஆப்பில் 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் வெறும் 45 நிமிடத்தில் 5 லட்சம் வரை கடன் பெற முடியும். இஎம்ஐ செலுத்துவது ஆறுமாத காலத்திற்கு பிறகே ஆரம்பம் ஆகும் என்று கூறியுள்ளது.
மேலும் வாசிக்க: நாட்டின் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்யலாம்- நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி
இரண்டாவது எஸ்பிஐ வீட்டு கடனுக்கான எம்சிஎல்ஆர் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7.40 சதவீதமாக இருந்த எம்சிஎல்ஆர் விகிதம் 7.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் மே 10, 2020 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
மூன்றாவது பாரத ஸ்டேட் வங்கி குறைந்து வரும் வட்டி விகிதத்திலிருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் ‘எஸ்பிஐ வீகோ் டெபாசிட்’ என்ற பெயரில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டம் செப்டம்பா் 30 வரை அமலில் இருக்கும். ஆனால், 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.20 சதவீதம் குறைக்கப்பட்டு, மே 12-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
நாட்டின் முக்கியமான பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நாட்டில் மக்களிடையே பணப்புழகத்தை அதிகரிக்க இந்த மூன்று திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி போல மற்ற பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் முதலீடுகளை ஈர்க்க வட்டியை உயர்த்துவது, மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தனிநபர் கடன் மற்றும் வணிக கடன் வழங்குவது உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.