லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஏப்ரல் 30, 2021க்குள் இடத்தை காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மனைவியும், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளருமான லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி 1.99 கோடியை செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள், கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அதன் பின்னரும் வாடகை பிரச்சினை நீடித்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.
[su_image_carousel source=”media: 20187,20188″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்க கோரி, ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், “கிண்டி ஆஸ்ரம் பள்ளியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஏப்ரல் 30, 2021க்குள் இடத்தை காலி செய்து கொடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் இடத்தை காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே லதா ரஜினிகாந்த், தனது ஆழ்வார்பேட்டை கடை வாடகை, ஆஸ்ரம் பள்ளி ஆசிரியர்களின் சம்பள பிரச்னை ஆகியவற்றில் நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பரில் தேதி அறிவித்து, ஜனவரியில் கட்சி துவக்கம்- நடிகர் ரஜினி