சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்டேடுக்கும் பணி இன்று (7-06-2021) சாலிகிராமத்தில் நடைபெற்றது.

இதில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, பிரபாகர் ராஜா அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “சென்னை சாலிகிராமம் கருணாநிதி தெருவில் உள்ள ரூ.250 கோடி மதிப்புள்ள 5.50 ஏக்கர் நிலம் ஆக்கரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாகனம் நிறுத்த பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அது மீட்கப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து உள்ளோம். அதற்குள் அவர்கள் அந்த வாகனங்களை நிலத்திலிருந்து எடுக்க வேண்டும்.

தற்போது மீட்கபட்ட நிலம் வடபழனி திருக்கோவிலுக்கு வழக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று ஒரு மாத காலம் தான் நிறைவடைந்துள்ளது. அதற்குள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் trailer தான் main picture இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள்.

அனைத்து கோவில் நிலங்களும் மீட்கப்படும். மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்தப்படும். அதை முதலமைச்சர் அறிவிப்பார். கோவில் நிலத்தில் நீண்ட நாள் இருக்கும் மக்களுக்கு அவர்கள் நலம் கருதி அந்த நிலத்தை அவர்களுக்கு வாடகை விடப்படும்.

கோவில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தற்போது மீட்ட இடத்தில் மக்களுக்கு நல்லது எதுவோ அது செய்யப்படும். தவறு யாரு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

முன்னதாக கோயில்களின் சொத்து, நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கணினிமயமாக்க ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் பேரா. ஜெ.ஜெயரஞ்சனுக்கு முக்கிய பொறுப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்