குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மீட்புப்பணியில் தங்கள் செயலால் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லெப்டினண்ட் ஜெனரல் அருண் நன்றி தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 8 ஆம் தேதி கோவையில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து IAF MI-17V5 என்ற வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணம் அடைந்தனர். இதனையடுத்து விபத்திற்கான காரணங்களை அறிய காவல்துறை, ராணுவம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதி முழுமையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஆதாரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தக்ஷின் பாரத் (தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தெலுங்கானா) பகுதியின் ஜெனரல் ஆஃபிசர் கமாண்டிங் பொறுப்பு வகிக்கும் லெப்டினண்ட் ஜெனரல் அருண் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்ற அவர், அங்கு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவியவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் பங்கேற்றார்.
விழாவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும், சால்வை அணிவித்தும், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
அப்போது பேசிய லெப்டினண்ட் ஜெனரல் அருண், “கிராம மக்கள் உதவி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த தருணம் பெருமையாக உள்ளது. விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள்.
குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம். இதுபோன்ற குடிமக்கள் இருந்தால் இதே ராணுவ உடையை 5 ஆயிரம் முறை கூட அணிந்து கொண்டு நாங்கள் பணியாற்றுவோம். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட தமிழக அரசுக்கு மிகப்பெரிய நன்றி.
நஞ்சப்ப சத்திரம் கிராமத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதனை தத்தெடுக்க தக்ஷின் பாரத் கமாண்டிங்கின் தலைமை அலுவலகம் விருப்பம் தெரிவித்துள்ளது என்று கூறிய அவர் இப்பகுதி மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்றும் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்” என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தக்ஷின் பாரத் பகுதிக்கான ராணுவ தலைமை அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில், ஹெலிகாப்டர் விபத்து பற்றி அறிந்ததும் விரைந்து வந்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளீர்கள்.
இச்செயல் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள்.
ஹெலிகாப்டர் விபத்தின்போது என்னென்ன உதவிகளெல்லாம் முடியுமோ, அதையெல்லாம் தங்களது தலைமையின்கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்துள்ளது.
இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேர்வதற்கு உற்காசமூட்டுவதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமையும்” என லெப்டினென்ட் ஜெனரல் அருண் கூறியுள்ளார்.