கொரோனா பாதிப்பு, நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக சார்பில் ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுக்க எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்க தமிழக அரசு தடை விதித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுககளின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது.