நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வெளியானது.
 
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்களிடம் குழந்தைகளை வாங்கி தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த, ராசிபுரம் தட்டாங்குட்டை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலிய உதவியாளர் அமுதவள்ளி(50), ராசிபுரம் நகர கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக பணியாற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன்(53) ஆகியோரை கைது செய்தனர்.
 
இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்களாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன், ஈரோடு மாமரத்துபாளையம் ஹசீனா (26), நிஷா, ஈரோடு சூரம்பட்டி அருள்சாமி (47) உள்ளிட்டோரை போலீசார் கைது செய்யதுள்ளனர்.
 
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இடைத்தரகர்களாக செயல்பட்ட லீலா மற்றும் செல்வி ஆகியோரும் கைது செய்யட்டனர்.
 
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அமுதவள்ளி பல ஆண்டுகளாக கொல்லிமலையில் இருந்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
 
இவ்வழக்கில் இதுவரை, 14 குழந்தைகளை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை விற்பனை செய்த மற்றும் வாங்கிய பெற்றோர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
 
இந்த நிலையில், குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
அதேபோல், கூட்டுறவு வங்கி ஊழியரும் செவிலியர் அமுதாவின் கணவருமான ரவிச்சந்திரன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலும் விரிவான விசாரணை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதை அடுத்து, குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
 
குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் அமுதா, ரவிச்சந்திரன் பர்வீன் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள் அளித்த தகவல்களின் பேரில் வேறு சிலரையும், ஒவ்வொரு கட்ட விசாரணையில் அடுத்தடுத்த நபர்களையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
 
அந்த வரிசையில் குமாரபாளையத்தைச் சேர்ந்த இடைத் தரகர்களான பாலாமணி, பாண்டியன் ஆகியோரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் அரசுத் தரப்பு சாட்சிகளாகியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.