பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கை விசாரிக்க நீதிபதி ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) நியமிக்கப்பட்டுள்ளது பாஜக மோடி அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்ற வீதத்தில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, இந்திய ராணுவ விமானப் படையின் மேம்பாட்டிற்காக பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அதன்படி ஒரு விமானம் ரூ.1670 கோடி என்ற வீதத்தில் 36 விமானங்களை வாங்க ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்க மோடி ஒப்பந்தம் செய்து கொண்டார். காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடிக்கு பேசப்பட்ட விமானத்தை ரூ.1670 கோடிக்கு வாங்கியது ஏன் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பின.
மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகும் 15 நாட்களுக்கு முன்னர், அதாவது 2015 மார்ச் 26 ஆம் தேதி, ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், தனது இந்திய தொழில்நுட்பப் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்து முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டு இருப்பதாக பிரான்ஸின் மீடியா பார்ட் இணைய ஊடகம் கூறியுள்ளது.
இதற்கான ஆவணங்களை வெளியிட்டுள்ள மீடியா பார்ட், பிரதமர் மோடியின் அறிவிப்பு அப்போதைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கே தெரியாது என்று கூறப்படும் நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் அனில் அம்பானி நிறுவனத்தை டசால்ட் நிறுவனத்தோடு இணைத்ததன் மூலம், காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியாவில் ரஃபேல் விமானங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்த பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் கழற்றிவிடப்பட்டதாகவும் மீடியா பார்ட் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2017ல் டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து, டிஆர்ஏஎல் எனப்படும் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கி புதிய ஒப்பந்தம் செய்தன. முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கட்டாயத்தின் பேரில் ரிலையன்சுடன் டசால்ட் இந்த ஒப்பந்தத்தையும் செய்ததாக மீடியா பார்ட் கூறியுள்ளது.
டிஆர்ஏஎல் முதலீடு மற்றும் பங்குகள் குறித்த உடன்படிக்கை விவரங்களை வெளியிட்டு அதிர்ச்சிகரமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது மீடியா பார்ட். அதாவது, மொத்தம் 169 மில்லியன் யூரோ முதலீட்டில் 159 மில்லியன் யூரோவை கொடுக்கும் டசால்ட் 49% பங்குகளை வைத்திருக்கும்.
அதேவேளையில் 10 மில்லியன் யூரோவை மட்டும் முதலீடு செய்யும் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு 51% பங்குகள் என்று டிஆர்ஏஎல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் மீடியா பார்ட் வெளியிட்டுள்ளது. வலுவான அரசியல் பலத்தால் ரிலையன்சுக்கு இப்படி ஒரு ஒப்பந்தம் சாத்தியமானதாக மீடியா பார்ட் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், தங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், பிரான்ஸ் அதிபராக இருந்த ஹாலேந்தே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்திற்காக பிரான்ஸின் டசால்ட் (Dassault) ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவின் துணை நிறுவனமான டெஃப்ஸிஸ் (Defsys) நிறுவனத்துக்கு 8.6 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது பிரான்ஸ் ஊழல் தடுப்பு துறை கண்டுபிடித்ததாக அந்த நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குப் பாய்ந்தது. ரஃபேல் ஒப்பந்தத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மேற்கொண்ட அறிக்கைகளின் மூலம் பல முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடுகளை விசாரிக்க தற்போது பிரான்ஸ் நாட்டின் நீதிபதியான ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்தியாவிலும் ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கையாண்டதால் ஒன்றிய பாஜக அரசு அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு பல்வேறு வகையில் ஊழலில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு மட்டுமே ஒப்பந்தம் போடும்படி இந்தியா வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட் தெரிவித்தார்.
அதற்கு, மறுப்பு தெரிவித்து ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் தாமாகவே ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர் என்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், அருண் ஜெட்லியும் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டால் இந்தியாவிடமிருந்து கோவாக்சின் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில் அரசு