அமானுஷ்ய சக்தி கிடைக்கும் என மூடநம்பிக்கையால் இரு மகள்களை பெற்றோர்களே நரபலி கொடுத்த சம்பவத்தில், இரு சடலங்கள் முன்பு தாய் பாட்டு பாடி, டான்ஸ் ஆடிய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா. புருஷோத்தம் மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் வேதியியல் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எம்.எஸ்.சி கணிதத்தில் தங்கப்பதக்கம் வென்ற மனைவி பத்மஜா, மதனபள்ளி பிரசாந்த் நகர் பகுதியில் ஐஐடி பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இவர்களது மகள் அலெக்கியா (வயது 27) போபாலின் இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். இவர் சமீபத்தில் பணியை ராஜினாமா செய்து விட்டு, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (வயது 22), பிபிஏ பட்டதாரியான இவர் ஏ.ஆர் ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்று வந்தார்.
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக மதனப்பள்ளியில் உள்ள பெற்றோருடன் மகள்கள் இருவரும் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாகவே புருஷோத்தமனும் பத்மஜாவும் அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறி வீட்டில் பூஜைகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் பூஜைகள் செய்துவிட்டு பெற்ற மகள்கள் இருவரையும் உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பிள்ஸ் மூலம் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி பூஜை அறையில் வைத்து ஏதோ பூஜை செய்துள்ளனர்.
பின்னர் தந்தை புருஷோத்தம், தனது சக ஊழியர்களில் ஒருவரை தொலைபேசியில் அழைத்து கொலைகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், புருஷோத்தம், பத்மஜா இருவரையும் கைது செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையின் போது அவர்களை பார்த்து பத்மஜா கூச்சலிட்டுள்ளார். பின்னர் நான்தான் சிவன். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வரவில்லை. எனது உடல் பாகத்திலிருந்து வந்தது. நான் மனித உருவில் இருக்கும் கொரோனா. வரும் மார்ச் மாதம் கொரோனா போய்விடும். தடுப்பூசியெல்லாம் போட்டுக்காதீங்க எனக் கூறியுள்ளார்.
மேலும் எங்கள் மகள்களின் உடலில் தீயசக்தி சென்றுவிட்டது. அதை கொல்வதற்காகத்தான் இப்படி செய்தோம். தீயசக்தி இருந்ததால் தான் அவர்கள் உடனே இறக்காமல் பல மணி நேரமாக இழுத்துக் கொண்டு கிடந்தார்கள் என தாய் பத்மஜா கூறியுள்ளார்.
தந்தை புருஷோத்தம் கூறுகையில் நான் ஒன்றும் முட்டாள் இல்லை, பிஎச்டி முடித்தவன். எங்களுக்கு தகவல் வந்தபடி செய்தோம் என சர்வசாதாரணமாக கூறியதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, “எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது என்பது பற்றிய முழு விவரங்களும் எங்களுக்குத் தெரியாது, ஆனால் நாங்கள் அங்கு சென்றதும் தம்பதிகள் சாதாரணமாக காணப்படவில்லை. இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள் என்று கூறி, அவர்களுக்கு ஒரு நாள் நேரம் கொடுக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டனர்” என்று தெரிவித்தனர்.