முள்ளிவாய்க்கல்: ஈழத் தமிழர் இனப்படுகொலை 11-வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், முள்ளிவாய்க்கல் நினைவேந்தலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் இருந்தன. அதில் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதி. சுற்றிலும் இலங்கை அரசின் ராணுவம் முற்றுகையிட்டு விட்ட நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள திறந்தவெளியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடாரங்களை கட்டி தங்கியிருந்தனர். விடுதலைப் புலிகளின் வாகனங்களும் அங்கு அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
வாகனங்களுக்கு அடியில் பதுங்கு குழிகளைத் தோண்டி, தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். ஆனால், ஈவு இரக்கம் ஏதுமின்றி, அந்த மாபெரும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை ராணுவம். இதில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பதுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்.
உயிர் போகும் வேளையில், உதிரம் வழிந்தோட அவர்கள் அலறிய சத்தம் இன்னும் தங்கள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருப்பதாக, இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, தற்போது வீடு, நிலம், உறவுகளை இழந்து, எதிர்காலம் சூனியமாகிவிட்ட நிலையில் உள்ள மக்கள் நினைவு கூறுகிறார்கள்.
[su_carousel source=”media: 13865,13866,13867″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”2″ speed=”0″]
மேலும் வாசிக்க: திருச்சியில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய விவசாயிகள்
இவ்வாறு இலங்கையில் 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நீடித்து வந்த உள்நாட்டுப் போர், 11 ஆண்டுகளுக்கு முன்பாக, 2009ம் ஆண்டு மே 18ம் தேதி, முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளுடன் நிறைவடைந்தது. இந்த போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது .
தமிழினத்தின் மிகப்பெரிய துயர சம்பவமான ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 11வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு, இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொது ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழீழம் தனிநாடு கோரி யுத்தம் நடத்திய விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையேயான இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடலில் ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரின் போது 8 மாதமான பெண் குழந்தை, தாய் இறந்தது தெரியாமல் அவரது மாரில் பால்குடித்த புகைப்படம் வெளியாகி உலகையே உலுக்கியது.
போரில் ஒருகையை இழந்த ராகினி என்ற பெயர்சூட்டப்பட்ட அக்குழந்தை, முள்ளிவாய்க்காலில் முதலாவது ஈகைச் சுடரை ஏற்றி உள்ளார். அப்பகுதியில் அனைத்து மதத்தினரின் பிரதிநிதிகள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருகோணமலை ஆதினத்தின் தலைவர் மே 18 பிரகடனத்தை வாசித்தார். பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு முள்ளிவாய்க்காலில் ஈகைச்சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.