மும்பை பாஜக பொதுச்செயலாளர் மோகித் கம்போஜ் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக சிபிஐ ரூ.57 கோடி வங்கி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவியான் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், பாஜக பொதுச் செயலாளருமான மோகித் கம்போஜ், 2013 ஆம் ஆண்டில் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து ரூ.60 கோடி கடன் பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு வரை கடன்களை வழங்காததால் மோகித்தின் நிறுவனம் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கி நடத்திய விசாரணையில், வங்கியிலிருந்து பெற்ற கடனை திசைத்திருப்பி நிறுவனத்தின் இயக்குனர் ஒருவரின் பெயரில் பிளாட் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 2014 முதல் அவரது நிறுவனம் நிதிநிலை அறிக்கைகளையும் தாக்கல் செய்யவில்லை. நிறுவனம் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் அதன் இயக்குனர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.
நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் புரோமோட்டர்கள் வங்கியின் பணத்தை பெற்று மோசடி செய்ததால், வங்கிக்கு ரூ.57.22 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பேங்க் ஆப் இந்தியா நிர்வாகம் சிபிஐக்கு புகாரளித்தது. வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் மோஹித் கம்போஜ், அபிஷேக் கபூர், நரேஷ் கபூர், சித்தாந்த் பாக்லா, இர்தேஷ் மிஸ்ரா, அவியான் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட், கேபிஜே ஹோட்டல்கள் ஆகியோருக்கு எதிராக மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் பெரும் வங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க: இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம்… நடந்தது என்ன..?