கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார மந்தநிலை, இயற்கைச் சீற்றங்கள் என மக்கள் அச்சத்தில் இருக்கும்போது, மாயன் காலண்டரை முன்னிறுத்தி ஜூன்.21 தான் உலகின் கடைசி நாள் உலகம் விரைவில் அழியப் போவதாக விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

2020ஆம் ஆண்டு இந்தியா வல்லரசாகி விடும் என்ற பொதுவான கருத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது மூச்சுத் திணறும் அளவிற்கு ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவின் பிடியின் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் வறுமையால் மக்கள் உயிரிழப்பு, இனவெறி தொடர்பான போராட்டங்கள், குஜராத்தில் தொடர் நிலநடுக்கம், பிரபல நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைவு என மிக மோசமான ஆண்டாகவே 2020 இருந்து வருகிறது.

வரும் 21ஆம் தேதி மிதுனம் ராசியில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இது ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம். இந்த கிரகணத்தின் போது மிதுனம் ராசியில் சூரியன், சந்திரன், ராகு, புதன் என நான்கு கிரகங்கள் இணைகின்றன. கேதுவும் நேராக இந்த 4 கிரகங்களை பார்கிறது. இதனாலும் ஒருவித அச்சம் பரவி வருகிறது.

இந்த சூழலில் மிகப் பெரிய விவாதப் பொருளாக விஸ்வரூபம் எடுத்துள்ளது மாயன் காலண்டர். 2012ஆம் ஆண்டே இந்த சர்ச்சைத் தொடங்கியது. 2012 டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப் போகிறது என்று செய்திகள் பரவின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. உலகம் இயல்பாக தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாயன் காலண்டரில் கூறியபடி ஜூன் 21, 2020 தான் உலகின் கடைசி நாள் என்று தகவல்கள் தற்போது பரவிக் கொண்டிருக்கின்றன.

மாயன் காலண்டர் பற்றி உலாவரும் செய்திகள்:

மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டவர்கள் தான் மாயன் இனத்தினர். 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் மனித நாகரிக இனத்தினர். ஜோதிடம், வானியல் சாஸ்திரம் என பல்வேறு விஷயங்களில் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே காலண்டரை உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளைக் கொண்டதாக காணப்படுகிறது.

உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறையைத் தான் பின்பற்றி வருகிறோம். அதற்கு முன்பு பல்வேறு வகையான காலண்டர்கள் வழக்கத்தில் இருந்துள்ளன. இதில் மாயன் மற்றும் ஜூலியன் ஆகிய காலண்டர்கள் முக்கியமானவை.

இதுகுறித்து விஞ்ஞானி பாலோ டகாலோகுயின் தனது பதிவில், ஜூலியன் காலண்டரை நாம் பின்பற்றி வந்திருந்தால் தற்போது 2012ஆம் ஆண்டில் தான் இருந்திருப்போம். அதாவது ஜூலியன் காலண்டரில் இருந்து கிரிகோரியன் காலண்டருக்கு மாறும் போது ஓராண்டில் 11 நாட்களைக் குறைத்துக் கணக்கிட்டுள்ளோம்.

1752ஆம் ஆண்டில் இருந்து தான் உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை பயன்பாட்டிற்கு வந்தது. எனவே 2020ல் இருந்து 1752ஐ கழித்தால் 268 வருகிறது. அதன்படி 268 ஆண்டுகளாக நாம் 11 நாட்களைக் கணக்கிடவில்லை. இவற்றை 268 x 11 எனப் பெருக்கினால் 2,948 நாட்கள் வருகிறது. இதை ஆண்டாக கணக்கிட்டால் 8 ஆண்டுகள் கிடைக்கிறது. தற்போதைய 2020ல் இருந்து 8 ஆண்டுகளைக் கழித்தால் 2012 வருகிறது. எனவே ஜூலியன் காலண்டர் முறைப்படி நாம் 2012 ஆம் ஆண்டில் தான் வசிப்பதாக தெரிவித்துள்ளார்.

மாயன் காலண்டர் கணக்கின் படி 2012 டிசம்பர் 21ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலியன் காலண்டர் கோட்பாட்டின் படி மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ள 2012 டிசம்பர் 21 என்பது வரும் ஜூன் 21ஆம் தேதி தான். எனவே மாயன் காலண்டர் சொல்லும் தகவலின்படி வரும் 21ஆம் தேதி தான் உலகின் கடைசி நாள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. ஏற்கனவே 2012ஆம் ஆண்டு உலகம் அழிந்துவிடுமோ என்று அச்சத்தில் இருந்த போது அப்படி எதுவும் நடக்காமல் இயல்பாய் கடந்து போனது. எனவே தற்போதும் எதுவும் நடக்காது என்று பலரும் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக நாசா விஞ்ஞானி ஒருவர் கூறும் போது, சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நிபிரு கிரகம் பூமியை நோக்கி வருவதாகவும், இதனால் 2003ஆம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று கூறினர். அதன்பின்னர் 2012ஆம் ஆண்டில் மாயன் காலண்டரின் படி உலகம் அழிந்துவிடும் என்று கூறினர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. ஏனெனில் இவை அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை. தற்போது 2020ஆம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று மீண்டும் தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றார்.

எனவே மாயன் காலண்டர்படி 2020ல் உலகம் அழியும் என்று பல்வேறு சர்ச்சைகள் பரவினாலும் நாம் தைரியமாக கடந்து போகலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.