தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா (வயது 88) இன்று (4.12.2021) காலமானார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா குண்டூர் மாவட்டம் வேம்புரு பகுதியில் 1933 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிறந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 1968, 74, 80 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 மற்றும் 2004-ல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 மார்ச் மாதம் முதல் 1999 ஏப்ரல் வரை காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்தவர். இவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் பல முறை அமைச்சராக இருந்த ரோசய்யா, ராஜசேகர் ரெட்டி மரணமடைந்ததை தொடர்ந்து 2009 செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 2010 நவம்பர் 24 வரை முதலமைச்சராக பணியாற்றினார். ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர்.
கடந்த 2011 முதல் 2016 வரை தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் ரோசய்யா இன்று (4.12.2021) காலமானார். ரோசய்யா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.