பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் 60 வருடங்களாக திரைத்துறையில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சனுடன் தமிழில் ஒருபடமாவது நடிக்க வேண்டும் என்பது ரஜினிகாந்தின் ஆசை. ஆனால் அவரது விருப்பம் இதுவரை நிறைவேறவில்லை.
இந்நிலையில் “உயர்ந்த மனிதன்” என்ற திரைப்படம் மூலம் அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகிறார். இதில் பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளார்.
கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார். திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தமிழ், மற்றும் இந்தியில் படமாக்க இருக்கிறார்கள்.
மார்ச் 2019ல் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்து, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அப்போது “உயர்ந்த மனிதன்” படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.
உயர்ந்த மனிதன் படம் குறித்து இயக்குநர் தமிழ்வாணன் கூறும்போது, “எனது கனவு நிறைவேறியது. உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை” என்றார்.
எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், “ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்” என்றார்.
இந்நிலையில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன் விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை பார்த்து மிகவும் துயரத்திற்கு ஆளாகி தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமென்று, சுமார் 200 விவசாயிகளின் கடனான ரூபாய் 1 கோடியே 25 லட்சத்துக்கான வங்கிக்கடனை தன் சொந்த செலவில் அடைத்துள்ளார். மேலும் இந்திய ராணுவத்தில் நம் நாட்டிற்காக உயிர் இழந்த பல ராணுவத்தினர் குடும்பத்திற்கும் அரசு உதவியுடன் தனது சொந்த செலவில் ரூ.1 கோடியை அளித்து உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.