ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
10 லட்சம் பேர்கள் வரை ஒன்றினைந்து நடத்தும்   இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கிவிட்டன. தினந்தோறும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு பல்வேறு வழிகளில் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது.
 
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மிரட்டியது. அடுத்ததாக போராடும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்று அரசு அதிரடி காட்டியது.
 
ஆனாலும் ஏழாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்ததால், மறியல் செய்து கைதானவர்களில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை மட்டும் சிறையில் போலீசார் அடைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஜாக்டோ – ஜியோ போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து ஆதரவு குவிந்து வருகின்றது.
 
இதில் தலைமை செயலக ஊழியர்கள் சங்க அலுவலகம் முன்பு, ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலக ஊழியர்களின் போராட்டத்தால் தலைமை செயலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தேர்வுத்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பிப்.1ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் 30 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 1200 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் திரும்பி சென்றுள்ளனர்.
 
திருவள்ளூரில் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தை தடுக்க திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
திருப்பூர் அருகே தேவாங்கபுரம் நடுநிலைப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்ததால் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் 90 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் அளித்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 80 சதவிகிதம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றும், தற்காலிக ஆசிரியர் பணிக்காக ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.