இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
 
டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் முன்ரோ 7 ரன்களிலும், கப்டில் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்சன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
பின்னர் ராஸ் டெய்லர் மற்றும் டிம் லாதம் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 119 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. அணியின் ஸ்கோர் 178 ரன்களாக இருக்கும் போது டிம் லாதம் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 106 பந்துகளில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து நியூசிலாந்து அணி 243 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்களையும் , சாஹல், ஹர்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
 
244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல தொடக்கத்தை அளித்தனர். குறிப்பாக தவான் அதிரடியாக ஆடினார்.
 
27 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்த தவான் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் கோலி ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர்.
 
2-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர். 77 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 62 ரன்கள் எடுத்தபோது ரோகித் சர்மா சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.
 
பின்னர் விராட் கோலியும் 60 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ராயுடு-கார்த்திக் ஜோடிசிறப்பாக ஆடி இந்தியாவை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். இறுதியில் 43 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
 
ராயுடு 40 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றி தொடரை வென்றது.