மலேசியாவில் இருப்பவர்களை மீட்கும் போது மஹாராஷ்டிராவில் சிக்கி இருப்பவர்களை மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திலிருந்து மகாராஷ்டிரா சென்றவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள சங்லி மாவட்டத்தில் குப்வாட் என்ற கிராமத்தில் கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பதாகவும், தமிழக அரசு அவர்களை மீட்க வேண்டும் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்திகளை அடிப்படையாக வைத்து, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 400 பேரை மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், மஹாராஷ்டிராவில் சிக்கியிருப்பவர்கள் தமிழகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அனைவரும் தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டுமென மஹாராஷ்டிரா அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையான வெயில் காலத்தையும் பொருட்படுத்தாமல், மனிதாபிமானமற்ற முறையில் ஏழை தமிழர்களை அடைத்து வைத்திருப்பது அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் வாசிக்க: ஆலயங்களில் நடக்கும் வேள்விகள் தொற்றுக்கு மருந்தாகக் கூடும்; தமிழக பாஜக தலைவர் கோரிக்கை
இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், இன்னமும் மஹாராஷ்டிராவில் சிக்கி இருக்கும் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் மீட்கப்படவில்லை என தெரிவித்தார். அரசு தரப்பில், மஹாராஷ்டிராவில் இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் மலேசியாவில் இருப்பவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் போது மஹாராஷ்டிராவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது என கேள்வி எழுப்பி, இந்த வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபி, மஹாராஷ்டிரா காவல்துறை ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.