கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் காப்பானை உத்தர பிரதேச காவல்துறையினர் மிருகத்தைப் போல நடத்தும் செய்தி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரள பதிக்கையாளரான சித்திக் காப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி கைது செய்தனர்.
அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் சித்திக் காப்பான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மதுரா காவல்துறை, அவர்மீது தேசதுரோக சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்கு பதிவு செய்தது.
மதுரா சிறையில் அடைக்கப்பட்ட சித்திக் காப்பான், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சிறை குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஏப்ரல் 21 ஆ ம் தேதி மதுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சித்திக் காப்பானின் மனைவி ரைஹாந்த் காப்பான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உத்தர பிரதேச காவல்துறையினர், சித்திக் காப்பானை கடும் சித்திரவதைக்குள்ளாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில், “தனது கணவர் மருத்துவமனை கட்டிலில் ஒரு விலங்கைப் போல கட்டி வைக்கப்பட்டுள்ளார். அவரால் எங்கும் நகர முடியவில்லை. சுயமாக உணவருந்த முடியவில்லை. கடந்த நான்கு நாட்களாக அவரால் கழிவறைக்கு கூடச் செல்ல முடியவில்லை.
அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு உரிய நேரத்தில் முறையான பரிசோதனை செய்யப்படாவிடில், அவர் மரணமடைய கூட நேரிடும் என்று கூறியுள்ளார்.
மேலும், சித்திக் காப்பான் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு விசாரிக்கப்படாமல் கடந்த ஆறு மாதமாக கிடப்பில் போடப்பட்டிருப்பதால் தான், இந்த விவகாரத்தை சட்டரீதியாக அனுகாமால் நேரடியாக உங்களுக்கு (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி) கடிதமாக எழுதுகிறேன். நீதியே அனைத்துக்கும் மேலானது. நீதி கிடைக்க சட்டம், விதி, வழிமுறை என அனைத்தும் வளைக்கபடலாம்” என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சித்திக் காப்பான் தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், “சித்திக் காப்பனுக்கு நீரிழிவு நோயும் இதயக் கோளாறுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் கொரோனா தொற்றுக்கு ஆளான பிறகு, மதுராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது உடல்நிலை மிக மோசமாக இருக்கும் நிலையிலும்கூட, அவர் கட்டிலுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவரை உயிர் காக்கும் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறுகையில், “சித்திக் காப்பானின் குடும்பத்திற்கு எனது ஆதரவை வழங்குகிறேன். அவருக்கு முழு பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி வழங்கவேண்டும். ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல் அவரை ஒடுக்குவதன் மூலம் தங்களின் தைரியமின்மையைக் காட்டுகின்றன. குற்றச் சம்பவங்களை நிறுத்துங்கள், செய்தி சேகரிப்பவர்களை அல்ல” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம்