சென்னை மயிலாப்பூரில் சாலையோரம் உறங்கியவர் மீது கார் ஏறிய விபத்தில், அந்த நபர் உயரிழந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (45), இவரது மனைவி ஆனந்தி. இந்த தம்பதிக்கு தேஜஸ்ரீ, சந்திரஸ்ரீ என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சென்னை பெரும்பாக்கம் பகுதியில் குடியேறியே ஏழுமலை டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.
விபத்து ஒன்றில் காலில் காயம் ஏற்பட்டதால் ஏழுமலை வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது மனைவி ஆனந்தி பெரும்பாக்கம் அருகில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார்.
கொரோனா காலத்தில் வறுமை காரணமாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில், கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு சென்ற ஏழுமலை, மயிலாப்பூர் பகுதிகளில் பிளாட்பாரத்தில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஆனந்தி அலைபேசிக்கு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. ஏழுமலை விபத்தில் சிக்கி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் சிகிச்சை பலனின்றி 5 ஆம் தேதி ஏழுமலை உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், கடந்த 4 ஆம் தேதி இரவு மயிலாப்பூர் தேரடி சன்னதி தெருவில் சாலையோரம் உறங்கி கொண்டிருந்த ஏழுமலை மீது அடையாளம் தெரியாத கார் ஒன்று ஏறி இறங்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
விபத்து அதிகாலை 4 மணி அளவில் நடைபெற்றதால் பொதுமக்கள் யாரும் இல்லை. துப்புரவு பணியாளர்கள் சாலையோரத்தில் ஏழுமலை ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் படுகாயத்துடன் கிடந்த ஏழுமலையை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து தன் கணவரை கார் ஏற்றிக் கொலை செய்த நபரை்களை கண்டுபிடித்து தருமாறு அடையாறு போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகளிடம் புகார் அளித்தார் ஆனந்தி. இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத கார் ஓட்டுனர் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், காயம் ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரை சிசிடிவி கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.