இந்தியா முழுவதும் சினிமா மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என மற்ற துறை சார்ந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டு பல மொழிகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றது. தோனி, சச்சின், சில்க் சுமிதா, சாவித்திரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையும் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் “தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” (The Accidental Prime Minister) இந்தி படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் விஜய் தத் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியிருக்கிறார். பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியாக சூசன் பெர்னெட்டும், ராகுல் காந்தியாக அர்ஜூன் மாத்தூரும், பிரியங்கா காந்தியாக அஹானாவும் நடித்திருக்கிறார்கள். மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் கண்ணா நடித்திருக்கிறார். இவர் பா.ஜனதா முன்னாள் எம்.பி வினோத் கண்ணாவின் மகன் ஆவார்.
மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய “தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்புத்தகம் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்புத்தகம் வெளியான சமயத்தில் புத்தகத்தில் வந்தவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே என அப்போதைய பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், நிர்வாகத்தில் சோனியா காந்தியின் தலையீடு இருந்தது என அந்தப் புத்தகத்தில் சஞ்சயா பாரு பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற பின்னர், மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டது, ரஷ்யாவுடனான அணுஆயுத ஒப்பந்தம், காஷ்மீர் விவகாரம் என அவரின் 10 ஆண்டுக்கால ஆட்சியின் பல்வேறு விவகாரங்கள் குறித்த காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இப்படம் வரும் ஜனவரி மாதம் 11ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தை பாஜக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. பதவியை ராஜினாமா செய்ய விரும்பும் மன்மோகன் சிங்கை சோனியா காந்தி தடுத்து நிறுத்துவதாக காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதை குறிப்பிட்டு மன்மோகன் சிங்கை கட்சி எப்படி பிடித்து வைத்திருந்தது என்று பாருங்கள் என்று கூறி படத்தின் டிரைலர் லிங்க்கை வெளியிட்டுள்ளது பாஜக.
பாஜக விளம்பரம் செய்தால் படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்று சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.