தனது பசியை போக்கிக் கொள்ள ஆசையாய் அன்னாசி பழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானைக்கு நிகழ்ந்த கொடுமை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே வயல்வெளிகள், நீர் நிலைகள், காடுகள் என சுற்றி திரிந்த யானை திடீரென இறந்து ஆற்றில் மிதந்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பசியை போக்கிக் கொள்ள வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை சாப்பிட்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது.
அன்னாசிப் பழத்தை உண்ணும் போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து யானையின் வாய், நாக்கு மற்றும் வாயின் உட்புறங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டன. அதன்பிறகு உண்ண முடியாமல் பசியால் துடிதுடித்துள்ளது. அதன்பிறகு ஆற்று நீரில் இறங்கி உயிரிழந்துள்ளது. ஆனால் யாரையும் அது துன்புறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது கர்ப்பிணியாக இருந்த யானையை வெடிபொருட்கள் கொண்டு கொன்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமான கயவர்களை பிடிக்க கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவி செய்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை; விரக்தியில் தீக்குளித்த மாணவி
யானையை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறும்போது, “20 வருஷமாக 250-க்கும் மேற்பட்ட யானைகளை பிரேத பரிசோதனை செய்துள்ளேன். ஆனால் முதல்முறையா, ஒரு யானையின் கரு என் கைகளில் இருப்பதை பார்த்து வார்த்தைகளின்றி நகர்ந்து சென்றேன்..” என்று கனத்த குரலில் கூறியுள்ளார்.
இந்நிலையில் Change.org என்ற இணையதளம் மூலம் யானையின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பலரது தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். தற்போது வரை 4,90,314 பேர் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் 5 லட்சம் கையெழுத்துகள் என்ற இலக்கு நிர்ணயித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
வனத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், “இறந்த யானைக்கு 15 வயது.. யானை உயிரிழந்த அதே வனபகுதியில்தான் காட்டுப்பன்றிகளும் இருந்திருக்கின்றன… அவைகள் பயிர்களை நாசம் செய்வதால், இந்த காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக அடிக்கடி வெடிகள் இதற்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம்தான் என்றாலும், அதனை எங்களால் முற்றிலுமாக கட்டுப்படுத்த இயலவில்லை. அப்படி காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்டதைதான், யானை தெரியாமல் தவறுதலாக தின்றிருகக் வேண்டும். மேலும் பொதுவாக யானைகள் 100 கிமீ தூரம் வரை நடக்கும் திறன் உடையது. அதனால் இந்த யானை எந்த இடத்தில் அந்த அன்னாசியை சாப்பிட்டது என்று தெரியவில்லை. அதைதான் கண்டுபிடித்து வருகிறோம்” என்கிறார்.
இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “கேரள மாநிலம் மலப்புரத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமான ஒன்றாக கையில் எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவில் வெடிபொருட்களை கலந்து கொடுப்பது இந்திய கலாச்சாரமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கர்ப்பிணி கொல்லப்பட்ட விவகாரத்தில் விராட் கோலி, ரெய்னா உள்ளிட்ட பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வனவிலங்குகளை மதிக்க வேண்டும் என்றும், இவையும் வாழ உலகில் வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.