காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது, தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு முடிவுக்கு தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மத்திய அரசு ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ அமைத்துள்ளது.
மேலும், ‘தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகியவை தங்கள் மாநிலத்தில் புதிய அணையை கட்டுவதாக இருந்தால், அதை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது’ என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தனது மாநிலத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது.
தமிழக எல்லைக்கு அருகே கட்ட திட்டமிட்டுள்ள அணையின் மூலம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும், 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் அது முடிவு செய்துள்ளது. இந்த அணை திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதை பொருட்படுத்தாமல், புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
உடனே, கர்நாடகாவின் திட்டத்தை நிராகரிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 4ம் தேதி கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, தனது மாநில எம்பி.க்களுடன் பிரதமரை செப். 10ம் தேதி சந்தித்தார். அப்போது, மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கோரி மனு கொடுத்தார்.
அதில், ‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடியில் அணை கட்டும் கர்நாடகா அரசு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த உடனடியாக தமிழகம் – கர்நாடகா – மத்திய அரசு பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என கோரப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பிறகு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு வேகமாக செய்தது.
அதே நேரம், ‘மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்து மத்திய அரசு செயல்படலாம்’ என உச்ச நீதிமன்றமும் கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள, கர்நாடகா அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மாதம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, அசுர வேகத்தில் ஆய்வு பணிகளை செய்து முடித்த கர்நாடக அரசு, அணைக்கான முதல் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.
இதற்கு அனுமதி வழங்குவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று அதிரடியாக அறிவித்தது. மேலும், ‘அணை கட்டுவதற்கு தேவையான மின்சாரம், கட்டுமான பொருட்கள் எடுத்து செல்வது உட்பட பல்வேறு பணிகளை எப்படி கையாள உள்ளீர்கள்?’ என்பதற்கான வரைவு திட்டத்தை விரைவில் தாக்கல் செய்யும்படியும் கேட்டுள்ளது.
இதனால், மேகதாது அணை திட்டத்தில் கர்நாடக அரசு மீண்டும் வேகம் எடுப்பது உறுதியாகி விட்டது. புதிய அணை கட்டும் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசும், தமிழக கட்சித் தலைவர்களும், விவசாய சங்கங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
கர்நாடகாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதி பற்றி, காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறுகையில், “மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தன்னிச்சையாக அனுமதி வழங்கியது தவறு.
அதற்கான அதிகாரமும் அதற்கு கிடையாது. ஏனெனில், காவிரியில் புதிய அணை கட்டுவது, திறப்பது, அணையை பராமரிப்பது போன்ற அனைத்து அதிகாரங்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் ஆலோசிக்காமல் நாங்கள் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம்’’ என்றார்.
இதை தொடர்ந்து எதிர்கட்சிகள் அதிமுக அரசை கண்டித்து உள்ளனர் . மத்திய அரசிடம் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையிலும் தமிழக அரசு முழு தோல்வியை சந்தித்து வருகிறது என்றும்.,
நீட் தேர்வில் விலக்கு, ஸ்டெர்லைட் ஆலை சீராய்வு மனு தள்ளுபடி, கஜா புயல் பாதிப்பு என எல்லாவற்றிலும் தமிழகத்தை மத்திய அரசு கைகழுவுகிறது என்றும் தெரிவித்தனர்
ஆனால் அதிமுகவினரோ ” கஜா புயல் பாதிப்புக்கு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிதியில், முதல்கட்டமாக ரூ.1,500 கோடி வழங்கும்படி கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரினார். ஆனால், மத்திய அரசு ரூ.200 கோடியை மட்டுமே வழங்கியுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்