கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு நேரில் சென்று ஆய்வு செய்வதாக அறிவித்திருந்த நிலையில் இன்று 7 பேர் கொண்ட குழு அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான குழு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
 
அங்கிருந்து 13 இடங்களில் அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். குளத்தூர், புதுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, வடுக்கப்பட்டி, பரமாநகர் போன்ற 13 இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். ஏற்கனவே 8 இடங்களில் நேரடியாக செல்ல உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 5 இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இவர்களுடன் துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக நிதி அமைச்சர்கள் போன்றவர்கள் வந்துள்ளனர். தொடர்ந்து இந்த பகுதி அதாவது புதுக்கோட்டை, நாகை , திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கம் என்பது அதிக அளவில் இருப்பதால் பல இடங்களில் விவசாய பயிர்கள் சீர்குலைந்துள்ளன, வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
 
இவ்வாறு கஜா புயலின் தாக்கத்தால் பொதுமக்களின் வாழ்க்கை என்பது இயல்பு நிலைக்கு திரும்பாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. பலரும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைந்திருக்க வேண்டிய சூழல் தற்போது வரை நிலவி வருகிறது.
 
இந்த சூழ்நிலையில் மத்திய குழு அந்த இடங்களில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய அறிக்கையை தாக்கல் செய்து இதை பேரிடராக அறிவிக்க வேண்டும், அதே போல உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்
 
இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பிற்காக, பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
கஜா புயல் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 13 கோடி ரூபாய் திரண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.