பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வெள்ளியன்று நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாகவும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் வங்கி சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
ஊதிய உயர்வு கேட்டும், மத்திய மோடி அரசின் பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடு முழுவதும் வெள்ளியன்று பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
 
அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக வெள்ளியன்று அனைத்து வங்கி அதிகாரிகளும் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மட்டும் வேலைக்கு வந்திருந்தனர்.
 
எனவே வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவைகள் எதுவும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின.
 
எனவே வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
 
முக்கியமாக நாளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் விடுமுறை என்பதால் தொழில் செய்வோர், வியாபாரிகள், நிறுவனங்களின் பணப்பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.
 
ஏ.டி.எம்.கள் செயல்பட்டாலும் அதிலிருந்து மிக குறைந்த அளவுதான் பணம் எடுக்க முடிந்தது. இதன் காரணமாக வர்த்தகர்கள் சிரமப்பட்டனர்.
 
25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இடையே 24-ந் தேதி திங்கட்கிழமை பொதுத்துறை வங்கிகள் வழக்கம் போல இயங்கும்.
 
மேலும் 26-ந் தேதி புதன்கிழமையன்று வேலை நிறுத்தம் செய்ய 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே தொடர்ச்சியாக அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.