அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும், மனித உரிமைகளுக்காக கனடா துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட கனடா அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தனர். இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் வெளிப்படையாக கருத்து வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
இதனைத் தொடர்ந்து கனடா பிரதமரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்து, கனடா நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்தியாவில் விவசாயிகள் தொடர்பாக கிடைத்த தவறான தகவல்கள் அடிப்படையில் கனடா நாட்டுத் தலைவர்கள் கருத்து வெளியிட்டதாக நாங்கள் பார்க்கிறோம்.
அத்தகைய கருத்துக்கள் தேவையற்றவை. ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பானவை. ராஜீய உரையாடல்கள், அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதே சிறந்ததாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் மீண்டும் தன்னுடைய கருத்தை வலுவாக பதிவு செய்துள்ளார். “அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும், மனித உரிமைகளுக்கான உரிமைக்காகவும் கனடா துணை நிற்கும். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அந்நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராபிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு; சம்மன் அளித்த இந்திய வெளியுறவுத்துறை