பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ் புனேயில் இன்று (12.2.2022) காலமானார்.
பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ராகுல் பஜாஜ் (வயது 83), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ராகுல் பஜாஜ் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் இருந்த போது அவரது உயிர் பிரிந்ததாக பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராகுல் பஜாஜ் 1938 ஜூன் 30 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். ராகுல் பஜாஜ் நீண்ட காலமாக நாட்டின் பழமையான தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் குழுமத்தின் தலைவராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். அவர் தொழில்துறையின் வெளிப்படையான குரல் என்று அறியப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பஜாஜ் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து அவர் ‘எமரிட்டஸ் தலைவராக’ நியமிக்கப்பட்டார். 2001 இல் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. மேலும் 2006ல் பாஜக, என்சிபி மற்றும் சிவசேனா கட்சிகளின் ஆதரவுடன் ராகுல் பஜாஜ் சுயேச்சை மாநிலங்களைவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
ராகுல் பஜாஜ் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசுவதற்கு பெயர் பெற்றவர். இந்தியாவில் காப்பரேட் ஆதிக்கம் குறித்த கவலையாக இருந்தாலும் சரி, நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, வெளிப்படையாகப் பேச அவர் தயங்கியதில்லை.
உதாரணமாக எகனாமிக் டைம்ஸ் ஏற்பாடு செய்த ஒரு விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் தொழிலதிபர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பேசிய ராகுல் பஜாஜ், “மக்கள் (தொழில்துறையினர்) உங்களை (மோடி அரசு) பார்த்து பயப்படுகிறார்கள். UPA-2 அரசு இருந்தபோது, நாங்கள் யாரையும் விமர்சிக்க முடிந்தது. ஆனால் இப்போது வெளிப்படையாக விமர்சித்தால் உங்களுக்கு பிடிக்கும் என்று தோன்றவில்லை” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொழிலதிபர் ராகுல் பஜாஜின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அவரது தொழில் வாழ்க்கை நாட்டின் பெருநிறுவனத் துறையின் எழுச்சி மற்றும் உள்ளார்ந்த வலிமையைப் பிரதிபலித்தது” என குறிப்பிட்டுள்ளார்.