கலால் ஊழல் புகாரில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் குற்றவாளிகள் என சிபிஐ வழக்குப்பதிவு செய்து, மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மதுபான பார்கள், கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லி முன்னாள் கலால் ஆணையர் ஆரவ கோபி கிருஷ்ணா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

டெல்லி கலால் கொள்கை 2021-2022 அமலாக்கத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், மதுவிற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 2 நாட்களாக மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது. சிசோடியாவைத் தவிர, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 அதிகாரிகளின் வீட்டிலும் சிபிஐ சோதனை செய்தது.

மேலும் மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள மணீஷ் சிசோடியா, “பாஜக அரசின் பிரச்சினை மது/எக்சைஸ் ஊழல் அல்ல. பிரச்சனை அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தடுக்கவே ஒன்றிய பாஜக அரசு, எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ஏவி உள்ளது, எனது வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனைகளும் அதன் எதிரொலியே.

நான் எந்த ஊழலும் செய்யவில்லை. நானும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் மிகவும் நேர்மையானவர்கள். நான் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி அமைச்சர் மற்றும் டெல்லி துணை முதல்வர். டெல்லியில் கல்வி எப்படி உள்ளது என்பதை அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு கவுரப்படுத்தி உள்ளது.

நாங்கள் கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கி வருகிறோம். ஆனால், தற்போது சிபிஐ ரெய்டு நடத்தி இருப்பது வெட்கக்கேடானது. நம் நாட்டில் நல்ல வேலை செய்பவர்கள் இவ்வாறு துன்புறுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதனால்தான் நம் நாடு இன்னும் உலகில் நம்பர் 1 ஆகவில்லை” என்று கடுமையாக சாடினார்

இந்நிலையில் மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “சுதந்திர இந்தியாவின் சிறந்த கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா” எனக் குறிப்பிட்டுள்ளார்.