மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து வரும் 20 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காணொலி வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் காணொலி இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மு.க.ஸ்டாலின், சரத்பவார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஹேமந்த்சோரன், சரத்யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருமாவளவன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை, நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து வரும் 20 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த 20 ஆம் தேதி இந்திய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில் வேளாண் சட்டங்கள்,
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள்- ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து,
திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வரும் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும், ஒருங்கிணைந்து போராடுவோம், மதசார்பற்ற – ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#FarmLaws, தொடர் விலையேற்றம், #PSU தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் – ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டிடக் கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/BrUk70LOBE
— M.K.Stalin (@mkstalin) September 5, 2021
உ.பி. மாநாட்டில் திரண்ட லட்சக்கணக்கான விவசாயிகள்- செப்டம்பர் 27 பாரத் பந்த்!