மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் 4 மாடி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பிறக்கும் போதே ஏதாவது குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கென இந்த மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டு உள்ளது.
இங்குள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் பிறந்து சில நாட்கள் ஆனது முதல் 3 மாதம் வரையில் உள்ள சுமார் 17 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சிகிச்சைப் பிரிவில் இருந்து திடீரென புகை தென்பட்டது.
அங்கிருந்த செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். அதற்குள் தீ வேகமாகப் பரவி அந்த பகுதி முழுவதையும் சூழ்ந்தது. இதையொட்டி அந்த குழந்தைகளை மீட்கும் பணி தொடங்கியது.
மீட்கப்பட்ட 17 குழந்தைகளில், 3 குழந்தைகள் சிகிச்சை தொடங்கும் முன்பே இறந்துவிட்டன. அதைத் தவிர 7 குழந்தைகள் புகை காரணமாக கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழந்துள்ளன. மீதமுள்ள 7 குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
[su_image_carousel source=”media: 21287,21288″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட முதல்வர் உத்தவ் தாக்கரே, மரணமடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ,5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
10 பச்சிளம் குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் மருத்துவமனை கவனக்குறைவா.. அல்லது எதிர்பாராத விபத்து என்பதா.. என்று கண்டறியப்படவில்லை. ஆனால் பிஞ்சு குழந்தைகளின் அலறலின் எதிரொலி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னமும் அடங்கவே இல்லை என்பதே உண்மை.
யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் அகற்றமும்; பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமும்