வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வுகாண இயலாது, அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய சங்கம் கூறியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 23-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

டெல்லி நகருக்கு வரும் 3 முக்கிய சாலைகளை அவர்கள் முற்றுகையிட்டு அங்கேயே முகாமிட்டு தங்கி இருகிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றுள்ளனர். போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே சொல்கிறது. தற்போது பெண்களும் அதிக அளவில் போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள்.

டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்கிறார்கள். அவர்கள் தற்காலிகமாக கூடாரங்களை அமைத்து உள்ளனர். 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் போராடும் விவசாயிகள் மீது குற்றம்சாட்டி மிக மோசமான அரசியல் செய்கிறார் என்று அகில இந்திய கிசான் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சங்க பிரதிநிதிகள், தேர்தலுக்கு முன்பு 50% ஆதாரவிலையை உயர்த்தி வழங்குவதாக பாஜக கூறியது. ஆனால் இன்றும் 25% குறைவாகவே ஆதாரவிலை வழங்கப்பட்டுவருகிறது.

ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கிவருவதாக பிரதமர் கூறுவது அப்பட்டமான பொய். புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக 2017ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது. இதுவரை 5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பாகவும் நீதிமன்றத்தில் ஒரு தீர்வும் ஏற்படவில்லை. தற்போது வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்துக்கு வந்துள்ளது.

நீதிமன்றம் குழு அமைக்கலாம் என்று கருத்துக் கூறியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தீர்வு காண முடியாது. மத்திய அரசு தான் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு- உச்சநீதிமன்றம் ஆலோசனை