உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஆண்டு புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தபோது திரையுலகினர் பெரும்பாலானோர் அவரது கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாசர் மனைவி கமீலா, ஸ்ரீப்ரியா, சினேகன் போன்ற ஒருசிலர் மட்டுமே அவரது கட்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மகளிர் தினமான இன்று தமிழ்த்திரையுலகின் பிரபல காமெடி நடிகை கோவை சரளா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இன்று கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்த கோவை சரளா, வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. பல ஆண்டுகளுக்கு முன்பு, பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘சதிலீலாவதி’ படத்தில் கமலும், கோவை சரளாவும் ஜோடியாக நடித்தனர். அதன்பிறகு பஞ்சதந்திரம், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களிலும் இருவரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தினமான இன்று கமல் கட்சியில் ஒரு முக்கிய பெண் பிரபலம் இணைந்துள்ளது அக்கட்சியினர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.