கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் 45வது மாவட்ட துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அஜித் நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிய படம் பிங்க் படத்தின் தமிழ் ரிமேக்காக உருவாகியுள்ள படம் ‘நேர் கொண்ட பார்வை’.

அஜித் நடிப்புத்துறை மட்டுமல்லாது கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் என பல்வேறு துறைகளிலும் ஆர்வம் காட்டி வருபவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக செயல்பட்டார்.

தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காண்பித்து வருகிறார். தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காலவர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் அஜித் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றார். இந்த பிரிவுகளில் அஜித் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து வரும் டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் பங்கு பெற உள்ளார். தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற, தல அஜித்துக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் அடுத்ததாக சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கு பெறுவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.