மகளிர் டி20 உலக கோப்பை இறுதி சுற்றில் தென்னாப்பிரிக்காவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக உலக கோப்பையை வென்று ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை இறுதி சுற்றில் 5 முறை சாம்பியன் பெற்ற ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்காவும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை அலைஸா ஹீலி 18 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கி அடித்து ஆட ஆரம்பித்த ஆஷ்லே கார்ட்னெர் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் கிரேஸ் ஹாரிஸ்(10), லானிங்(10), எலைஸ் பெர்ரி (7) ஆகியோர் சோபிக்காமல் சீரான இடைவெளியில் ஒருமுனையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீராங்கனை பெத் மூனி அரைசதம் அடித்தார்.
அரைசதம் அடித்த பெத் மூனி 53 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலிய அணி.
157 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியை ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. ஆனாலும் இலக்கை விரட்ட கடுமையாக முயற்சித்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.