வருமான வரித்துறை கணக்குத் தாக்கல் செய்து, பணம் திரும்பப் பெறும் விவகாரத்தில் பலருக்கும் முறைகேடு செய்ய உடந்தையாக இருந்ததாக தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை கைது செய்துள்ளது சிபிஐ.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலுர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரன் தினமும் மாணவர்களைப் போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருவது, மாணவர்களுக்கு சொந்த செலவில் மொபைல் வாங்கித் தருவது போன்ற செயல்களால் பிரபலம் அடைந்தார்.

இவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அவரை ‘மாமா, சித்தப்பா, பெரியப்பா, மச்சான், மாப்பிள்ளை’ என்று உறவு முறை வைத்து அழைப்பதும் பேசப்பட்டது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் முடி திருத்தும் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் ஆசிரியர் ராமசந்திரன் நேரடியாக மாணவர்கள் வீடுகளுக்கு சென்று மாணவர்களுக்கு முடி திருத்தி விட்ட செய்திகளும் வெளியாயின.

கொரோனா காலத்தில் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று கல்வி போதித்தார் என்ற அடிப்படையில் அவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இவர் விருது பெற்றார்.

இவரது சகோதரர் பஞ்சாட்சரம் மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் Tax Information Network என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் நிறைய பேருக்கு வருமான வரித்துறை கணக்குத் தாக்கல் செய்யும்போது முறைகேடாக கணக்கு காண்பித்து அதிகமான பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இப்படி வாடிக்கையாளர்களுக்கு 2 கோடியே 84 லட்சம் முறைகேடாக திரும்ப பெற்றுக் கொடுத்து அதில் பல லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் பேரில் சிபிஐ 2021ல் பஞ்சாட்சரம் மீது வழக்கு பதிவு செய்து 2022ல் அவரை கைது செய்தது. பிறகு அவர் பிணையில் வெளியே வந்தார்.

இந்நிலையில் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் பஞ்சாட்சரம் தமது வங்கி கணக்கில் இருந்து சில மாதம் முன்பு ரூ.12 லட்சம் அனுப்பியுள்ளார். இது குறித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மதுரையில் அவ்வப்போது விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜரான ராமச்சந்திரன் அதிகாரிகள் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல், வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட 12 லட்சத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைக்காமல் இருந்ததாக குறிப்பிட்ட அதிகாரிகள் அவர் மீது வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

முறைகேடாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டி அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120(B), 420 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தது சிபிஐ . அவர் தற்போது நீதிமன்றக் காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்த மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க பள்ளி) ராமசந்திரனை தற்காலிக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் ராமசந்திரனுக்கு ஒன்றிய அரசு வழங்கிய தேசிய நல்லாசிரியர் விருதை திரும்ப பெறுவதற்கு பரிந்துரை கடிதம் ஒன்றையும் தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.