இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஒரு விக்கெட் எடுத்தால் வென்றிருக்கலாம் என்ற நிலையில் இந்திய அணி ஏமாற்றத்துடன் போட்டியை ட்ரா செய்திருக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 145 ரன்கள் எடுத்தது. அதேபோல் நியூசிலாந்து அணியும் தங்களது முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 284 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஆனால் கடைசி ஒரு விக்கெட்டை மட்டும் இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. அதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இப்போட்டி டிராவில் முடிவடைந்ததற்கு நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் சச்சின் ரவீந்திரா முக்கிய காரணமாக இருந்தார். 7-வது வீரராக களமிறங்கிய இவர் 91 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

எவ்வளவு முயன்றும் இவரது விக்கெட்டை இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. அதேபோல் மறுமுனையில் அஜாஸ் படேலும் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனால் நியூசிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பியது.

நியுசிலாந்து வெல்வதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் இந்தியாவின் வெற்றி தட்டிப்பறிக்கப்படும் என்ற சூழலே இருந்தது. இந்த போட்டியின் கடைசி செஷன்கள் அத்தனையிலும் பெரிதாக விக்கெட் எதுவும் விழுந்திருக்கவில்லை என்பதால் நியுசிலாந்து நினைக்கும் ரிசல்ட்டே சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மீண்டும் ட்விஸ்ட் நடந்தது. ஜடேஜா மற்றும் அஷ்வின் இருவரும் வேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி நியுசிலாந்து மீது அழுத்தத்தை ஏற்படுத்தினர். ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் மேற்கொண்டு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் நியுசிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராட வேண்டியிருந்தது.

இந்திய அணி இந்த போட்டியை தோற்கவில்லை என மகிழ்வுற்றாலும் ட்ரா செய்ததே இந்தியாவிற்கு கொஞ்சம் பின்னடைவு தான். இப்போது நடைபெறும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியே. இதில் பெறும் புள்ளிகளை வைத்து தான் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் அணிகள் தீர்மானிக்கப்படும். எனவே, வெல்ல வேண்டிய போட்டி ட்ரா ஆவது இந்தியாவிற்கு பின்னடைவாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.