கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலியாக பாரத ஸ்டேட் வங்கி கிளையை நிறுவ முயன்று, வங்கி பதிவேடுகள், முத்திரைகள், படிவங்கள் அனைத்தையும் போலியாக தயார் செய்த, முன்னாள் அரசு வங்கி மேலாளரின் மகன் உட்பட 3 பேரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் பண்ருட்டி காவல் துறையினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போலியாக வங்கி கிளை ஒன்றை ஏற்பாடு செய்ய கமால்பாபு என்பவர், குமார் மற்றும் மாணிக்கம் இருவரின் உதவியுடன், பண்ருட்டியில் பாரத ஸ்டேட் வங்கியின் வடக்கு பஜார் கிளை என்ற பெயரில் போலி வங்கிக் கிளை தொடங்க ஏற்பாடுகள் செய்து, பண்ருட்டி வடக்கு பஜார் கிளை என்ற பெயரில் இணையதளத்தையும் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் மூலம் தகவல் அறிந்த பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் வெங்கடேசன், பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, போலி வங்கி ஆவணங்கள் குறித்து காவல் துறையினர் ஆய்வு செய்ததில், வீட்டின் மாடியில் போலியான பாரத ஸ்டேட் வங்கியின் வடக்கு பஜார் கிளைப் பெயரில் வங்கி படிவங்கள், பதிவேடுகள், வங்கி முத்திரைகள், பணம் பரிவர்த்தனை செய்யும் படிவங்கள் உள்ளிட்ட அனைத்தும் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, கமால்பாபு, அவருக்கு வங்கி முத்திரைகள், படிவங்கள் தயார் செய்ய உதவி புரிந்த பண்ருட்டியை சேர்ந்த ஈஸ்வரி ரப்பர் ஸ்டாம்ப் உரிமையாளர் மாணிக்கம், அருணா அச்சகம் உரிமையாளர் ஏ.குமார் ஆகிய 3 நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கர் கூறும்போது, “கமால்பாபுவின் தந்தை பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலாளர். வங்கி சேவையின் போது மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில், 12ஆம் வகுப்பு வரை படித்த கமால்பாபு, தந்தையைப் போல வங்கியில் பணியாற்ற வேண்டும் என முயன்றுள்ளார்.
இதனையடுத்து, இவர்கள் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு போலி வங்கி கிளை அமைக்க இதுபோன்று பதிவேடுகள், ரப்பர் முத்திரைகள், வங்கி படிவங்களைப் போலியாகத் தயார் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் போலியாக வங்கிக் கிளை தொடங்குவதற்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வங்கி கிளைப் பெயரில் எந்த பணப் பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை. பணம் கையாடல்கள் செய்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
இந்த மூவருக்கும் எதிராக மோசடிக்கான வழக்கு, நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காகச் செயல்பட்டது, அரசு முத்திரையைப் போலியாகத் தயார் செய்தது உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.