சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நள்ளிரவில் கால்டாக்ஸி டிரைவருக்கும் காவலர் ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், கால்டாக்ஸி டிரைவரை அடித்ததால் பிரச்னை வெடித்தது
 
சென்னைப் பழவந்தாங்கலிருந்து மேடவாக்கம் செல்வதற்காக வேளச்சேரி மேம்பாலம் அருகில் பைக்கில் ஒருவர் நேற்று இரவு 11 மணியளவில் சென்றார்.
 
அப்போது, அந்தப் பகுதியில் உள்ள வளைவில் காரும் பைக்கும் திரும்பும்போது ஒன்றோடு ஒன்று மோதுவதுபோல சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் சென்றவர், கால்டாக்ஸியை வழிமறித்து வாக்குவாதம் செய்தார்.
 
வாக்குவாதம் முற்றிய நிலையில் கால்டாக்ஸி டிரைவரை, பைக்கில் வந்தவர் அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அவ்வழியாக வந்த இன்னொரு கால்டாக்ஸி டிரைவர், நடந்த சம்பவத்தைப் பார்த்து பைக்கில் வந்தவரை தட்டிக் கேட்டுள்ளார். அவரையும் பைக்கில் வந்தவர் அடிக்க முயன்றுள்ளார்.
 
இதற்கிடையில் கால்டாக்ஸி டிரைவரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் கால்டாக்ஸி டிரைவர்கள் வாட்ஸ்அப்பில் பரவியது. இதனால் நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட கால்டாக்ஸி டிரைவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
 
சிறகுகள் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் சபரிநாதன், போலீஸ் எனக்கூறியவரிடம் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்தார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், “கால்டாக்ஸி டிரைவர்கள் காவல்துறையினரால் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது.
 
சமீபத்தில்தான் கால்டாக்ஸி டிரைவர் ராஜேஸை அண்ணாநகர் பகுதியில் போலீஸார் அசிங்கமாகப் பேசியதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்.
 
அதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்குள் வேளச்சேரி மேம்பாலம் பகுதியில் கால்டாக்ஸி டிரைவர் ரஞ்சித் குமாரை மஹாவீர் என்ற காவலர் தாக்கியுள்ளார்.
 
மஹாவீர், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
 
சம்பவம் நடந்தபோது காவலர் மஹாவீர், போதையில் இருந்தார். அவரை பள்ளிக்கரணை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம். காவல்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.
 
சம்பவம் நடந்தவுடன் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்தோம். ஆனால் முக்கால் மணி நேரம் கடந்தபிறகுதான் போலீஸார் அங்கு வந்தனர்.
 
கால்டாக்ஸி டிரைவர்கள் குவிந்ததால் காவலர் மஹாவீர் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அவரை நாங்கள் விடவில்லை. பொதுமக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனடியாக சம்பவ இடத்திலேயே போலீஸார் கருவி மூலம் கண்டறிவார்கள்.
 
ஆனால், மஹாவீர், குடிபோதையில் தள்ளாடியபோதும் அவருக்கு எந்தவித பரிசோதனையும் போலீஸார் நடத்தவில்லை” என்றார்.
 
இதுகுறித்து கால்டாக்ஸி டிரைவர் ரஞ்சித்குமார் போலீஸாரிடம் கொடுத்த புகாரில், “நான், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, பெரிய செவலை போஸ்ட், துளங்கம்பட்டு, பிள்ளையார்கோயில் தெருவில் குடியிருந்துவருகிறேன்.
 
சம்பவத்தன்று நான், வாடிக்கையாரை ஏற்ற பழவந்தாங்கல் யு டர்ன் அருகே காரில் வந்தபோது பைக்கில் சென்ற நபர், காரின் மீது மோதுவதுபோல வந்தார். பிறகு அந்த நபர் காரின் முன்னால் பைக்கை நிறுத்திவிட்டு என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
 
காரின் கதவைத் திறந்து என்னைத் தாக்கினார். குடிபோதையில் இருந்த அந்தநபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, “கால்டாக்ஸி டிரைவரை காவலர் மஹாவீர் தாக்கியதாகக் கூறி கால்டாக்ஸி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிரைவர் ரஞ்சித்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.