பொள்ளாச்சி விவகாரத்தில் தண்டனை கொடுப்பதில் ஏன் தாமதம் என்று நடிகர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை மூன்று நாள் காவலில் எடுத்து முடித்துள்ள சிபிசிஐடி போலீஸ், திருநாவுக்கரசு கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்விகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் சொல்லும் நாளில் திருநாவுக்கரசு பொள்ளாச்சியில் இல்லை என திடீர் வாதம் கிளம்பியுள்ளது. இதனால் வழக்கு திசை மாறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
குறிப்பாக விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களைக் குறை சொல்கிறார்கள். இது தவறானது. இந்நேரம் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா. இது தவறு என்று ஒரு குழந்தைக்கு கூட தெரியும்.
இந்த சம்பவத்தில் சிலர் பெண்களைக் குறை கூறுகிறார்கள். அது மிகவும் தவறானது. சம்பந்தப்பட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண்ணின் குரலை, ஒரு 10 வினாடிகள் கூட கேட்க முடியவில்லை. மிகவும் கஷ்டமாக உள்ளது” எனக் கூறினார்.