பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, தனிமையில் வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அந்த காமக் கொடூரர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்கச் செய்தது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், “அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம், இந்த மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்களுக்கு சட்டப்படிஉச்சபட்ச தண்டனையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், மனநலம் சம்மந்தப்பட்ட பாடத்திட்டம் பள்ளியில் இருந்தே இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அதனால் மட்டும் இந்த மிருகங்கள் மாறிவிடுவார்கள் என நான் நம்பவில்லை. இது போன்ற கொடூரமான மனம் படைத்தவர்களை கடுமையாக தண்டிக்கத்தான் வேண்டும் மன்னிக்க முடியாது. உடனடியாக சட்டத்திற்கு உட்பட்டு இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பந்தமான விவகாரத்தில் முறையான உடனடியான நடவடிக்கை தேவை என்பதை அவரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார். சட்டம் தன் கடமையைச் செய்யும் என நம்புவோம்.
இந்த நேரத்தில் ஊடகங்களான உங்களுக்கு ஒரு கோரிக்கை. எந்த காரணத்தைக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களையோ, படங்களையோ எதிலும் பகிர்ந்துவிட வேண்டாம். எங்கும் சொல்லி விட வேண்டாம்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது.
இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து ,அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.
இச்செயலில் காவல்துறை நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படும் என நம்புகிறோம்,அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம்.
அலைபேசியில் உள்ள இணையதளங்கள் முகநூல் வாட்ஸ்அப் போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நம்மை வழி நடத்துவதில் நம் பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும், கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை ..!அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.