குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படிக்க வேண்டிய அவசியம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது.
பொறியியல் தொழிற்கல்வி படிப்பிற்கு 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் அடிப்படையாக உள்ளன. இந்த பாடங்களை கொண்ட பிரிவில் படித்தால் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர முடியும். ஆனால் இதனை மாற்றி கணிதம் பாடம் இல்லாமல் பொறியியல் படிப்பில் சேர முடியும் என்று புதிய கல்வி கொள்கை வழிவகுத்துள்ளது.
தற்போது 2022- 2023 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது. 29 இளநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிப்புகளுக்கும் தனித்தனியாக விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து AICTE வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கணினி அறிவியல், மற்றும் மின் & மின்னணு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை. மேலும் 3-ல் 1 பங்கு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை எனவும் 12 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களும் வரும் காலத்தில் பொறியியல் படிப்புகளில் சேரலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், 12 ஆம் வகுப்பில் கணிதம் பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு, முதலிரண்டு செமஸ்டர்களில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் அடிப்படை Bridge course முறையில் கற்பிக்கப்படும் என AICTE விளக்கம் அளித்துள்ளது.
குறிப்பாக வேளாண்மை பொறியியல், கட்டடக்கலை, உயிர் தொழில்நுட்பவியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை” என குறிப்பிட்டுள்ளது.
நடப்பு 2021- 2022 ஆம் கல்வியாண்டுக்கு AICTE வெளியிட்ட விதிமுறைகளில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை 12 ஆம் வகுப்பில் விருப்பப்பாடமாக மட்டும் படித்து இருந்தால் அனைத்து பொறியியல் படிப்புகளிலும் சேரலாம் என தெரிவித்திருந்தது.
இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, குறிப்பிட்ட பொறியியில் பாடப்பிரிவுகளில் மட்டும் கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.
தற்போது 4 வருட பொறியியல் படிப்பை இடையில் விட்டு சென்றால் சான்றிதழ் பெற முடியாது என்ற நடைமுறை உள்ளது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த வருடமும் படிப்பில் இருந்து மாணவர் வெளியேறலாம், உள்ளே வருவதற்கும் வழி வகுக்கப்பட்டுள்ளது.
முதல் ஆண்டு படித்து விட்டு வெளியே சென்றால் அதற்கு சான்றிதழ் வழங்கப்படும். 2-வது ஆண்டில் படிப்பை நிறுத்தினால் டிப்ளமோ சான்றிதழ் கிடைக்கும். 3-வது ஆண்டில் வெளியேறினாலும் அதற்கு தனி சான்றிதழ், 4-வது ஆண்டு முழுமையாக படித்து முடித்தால் பொறியியல் சான்றிதழ் என தனித்தனியாக வழங்குவதற்கு வழி வகைசெய்யப்பட்டுள்ளது.
இதனால் தேசிய கல்விக் கொள்கையை கல்வியாளர்கள் எதிர்க்கிறார்கள். பொறியியல் படிப்பிற்கு கணிதம், இயற்பியல், வேதியல் பாடங்கள் படிப்பது அடிப்படையாகும். அப்போது தான் பி.இ., பயோடெக்னாலஜி படிப்புகளுக்கு செல்லும் போது உதவியாக இருக்கும்.
ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் அது தேவையில்லை. அதற்கு பதிலாக இணை பயிற்சி படிப்புகள் படித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இது மாணவர்களின் உயர் கல்வி தரத்தை குறைக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.