லோக்சபா தேர்தலுடன் சேர்த்து காஷ்மீர் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களுக்கு மட்டும் சட்டசபை தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது ஏன் என காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்.
 
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பரூக் அப்துல்லா அளித்துள்ள பேட்டியில், லோக்சபா தேர்தலுக்கு சேர்த்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கிறோம்.
 
லோக்சபா தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள போது, காஷ்மீரில் மாநில தேர்தலை நடத்த மட்டும் ஏற்ற சூழ்நிலை இல்லையா? உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால். போதிய அளவில் பாதுகாப்பு படைகள் உள்ளன.
 
அப்படி இருந்தும் காஷ்மீரில் மட்டும் ஏன் தேர்தல் நடத்த முடியாது? பாகிஸ்தான் உடன் சண்டை அல்லது மோதல் நடக்கும் சூழ்நிலை உள்ளது எங்களுக்கும் தெரியும். லோக்சபா தேர்தலை மனதில் வைத்தே இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டுள்ளது.
 
அதனால் கோடிக்கணக்கான மதிப்புடைய போர் விமானத்தை நாம் இழந்துள்ளோம். அதே சமயம் இந்திய விமானப்படை விமானி பத்திரமாக மீண்டு வந்ததற்கும், பாகிஸ்தானில் இருந்து மரியாதையுடன் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.